தாமரைக் கண்ணான் உலகு – ஆராய்ச்சி
இக்கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர், தாமரைக் கண்ணான் யார்
என்பதை இங்கு
படித்துவிட்டு மேலே செல்லுங்கள்.
என் கட்டுரையில் குறும்பாக ஒரு கேள்விக்
கேட்டிருந்தேன்?
”வைகுண்டத்தில் ”சுவர்க்கத்துக்கு” இடம் உண்டென்றால், அது
தாமரைக் கண்ணான் உலகு தான்!!
(திருமால் உலகுதான்)”
என்று. அக்கேள்விக்கு பொருத்தமான
விடை கூறுவதைவிட்டு, அது உயர்வு நவிர்ச்சியாகக் கூறப்படும் பாடல் என்று சப்பைக்கட்டு
வேறு கட்டுகிறார்கள்! ;-)
இவர்கள் கூற்று பிதற்றல் கூற்று என்பதையும் பார்ப்போம்!
”ஆனாத செல்வத்து அரம்பையர்கள்
தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும்
யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச்
சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன்
ஆவேனே”
”அரம்பை, ஊர்வசி போன்ற பெண்கள் புடைசூழ வானுலகம்
ஆளும் இந்திரன் செல்வத்தையும் (செல்வம் என்பது இன்பத்தைத் தொக்கி நின்றது) விரும்பமாட்டேன்;
மண்ணகத்தை ஆளும் அரசையும் விரும்பமாட்டேன்; அதைவிட திருவேங்கடத்தில் சுனையில் மீனாகப்
பிறக்கும் பேறையே விரும்புவேன்”
என்று குலசேகர ஆழ்வார் கூறுவதைப் பார்க்கும்
போது, மற்ற இன்பத்தைவிட திருமால் உறையும் திருவேங்கட மலையில் உள்ள ஒரு சுனையில் மீனாகப்
பிறக்கும் இன்பமே பெரிது என்ற கருதுகோளை தெளிவாக நம்மால் விளங்கி கொள்ள முடிகிறது!
மேலும் ஒரு காட்டு.
”பச்சைமா
மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா
அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே
என்னும்
இச்சுவை
தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை
பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே”
என்று தொண்டரடிப் பொடியாழ்வார் குறித்திருப்பதையும் நோக்க,
இந்திரன் உலககத்தில் கிடைக்கும்
சுவையைவிட திருமால் நாமத்தால் கிடைக்கும் சுவை பெரிது என்பதையும் எம்மால் விளங்கி
கொள்ள முடிகிறது!
ஆயின்,
புணர்ச்சியில்
மகிழும் தலைவன், இவள் உடலைத்
தழுவதால் கிட்டும் சுகத்தை விட இந்திரலோகத்தில்
கிடைக்கும் சுகம் இனிதாக
இருக்க முடியுமோ? என்று தனக்குள் நினைத்துப் பாடும் பாடலை,
இவள்
உடலைத் தழுவுவதால் கிடைக்கும் சுகத்தைவிட திருமால் உறையும் வைகுண்டத்தில்
கிடைக்கும் சுகம் இனிதாகயிருக்குமா? என்று பொருள் விளங்கிக் கொண்டால்,
பொருத்தமாகயிருக்குமா?
அவ்வாறு
பொருள் கொண்டால், ஆழ்வார்களின் கொள்கைக்கு அது முற்றும் முரண் அல்லவோ???!
ஏன்
வீம்புக்கு வைகுண்டத்தின் சிறப்பைத் தாழ்த்த வரிந்துக் கொண்டு நிற்கிறார்கள்??
காம
சுவையில் ஊறும் ஒருவன், அவ்வேலையில் வைகுண்டத்தை நினைப்பானோ? அப்படி யாரும்
நினைப்பரோ??
இவ்வாறு
சிறப்பு குன்றிப் பொருள் கொள்வதற்கு பரிமேலழகர் உரை ஒரு காரணமாக அமைந்துவிட்டதுதான்
பெரும் துர்திஷ்டம்!
மறுபடியும் அவருரையைப் பார்ப்போம்.
பரிமேலழகர் உரை:
தாம் வீழ்வார் மென் தோள்துயிலின் இனிதுகொல் – ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு – அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் “இனிது கொல்” என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.
பரிமேலழகர் உரை:
தாம் வீழ்வார் மென் தோள்துயிலின் இனிதுகொல் – ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு – அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் “இனிது கொல்” என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.
தாமரைக் கண்ணான் உலகு = செங்கண்மால் உலகம்
என்று
பொருள்
காணுகிறார். தாமரைக் கண்ணான் உலகு
என்பதற்கு இந்திரன் உலகு
என்று
உரைப்பரும் உளர்
என்று
தமக்கு முன்னால் பொருள் உரைத்த மணக்குடவரையும்,
பரிபெருமாளையும் குறிப்பால் உணர்த்துகிறார்.
அன்றியும், தாமரைக் கண்ணான் என்பது அவனுக்குப் (இந்திரனுக்கு) பெயரன்மையின், அஃது
உரையன்மையறிக! எனவும்
விதந்து தனது
பொழிப்புரையை முடிக்கிறார்.
மணக்குடவரும், பரிபெருமாள் ஆகியோர் பரிமேலழகரைவிட காலத்தால்
முந்தியவர்கள். மணக்குடவருக்கும், பரியாருக்கும் இடையே காலவெளியையும் நாம்
கவனத்தில் இருத்துதல் வேண்டும். கால இடைவெளி சுமார் நானூறு ஆண்டுகளாவது இருக்கும். இவர்கள் ஏன் தாமரைக் கண்ணான் என்பதற்கு இந்திரன்
என்றுப் பொருள் கொள்ள வேண்டும்? அவர்களுக்கு அஃது
“உரையில்லை” என்பது
தெரியாதா?
தெரியும்!!
தெரிந்தே தான் அவ்வாறுப் பொருள் கொண்டிருக்கிறார்கள். ஏன், பரிமேலழகருக்கு பின்னே வந்த கவிராஜ பண்டிதரும் தாமரைக் கண்ணான் உலகு என்பதற்கு சுவர்க்க லோகம் என்றே பொருள் கொண்டிருக்கிறார்.
தெரிந்தே தான் அவ்வாறுப் பொருள் கொண்டிருக்கிறார்கள். ஏன், பரிமேலழகருக்கு பின்னே வந்த கவிராஜ பண்டிதரும் தாமரைக் கண்ணான் உலகு என்பதற்கு சுவர்க்க லோகம் என்றே பொருள் கொண்டிருக்கிறார்.
உரையில்லையா?
எடுகோளாக, கீழ்
வரும்
சுட்டியைப் படியுங்கள்.
http://www.sishri.org/indranprint.html
”கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியாரில் (பா.373) ‘அங்கண் விசும்பில் அமரர் தொழப்படும் செங்கண்மால்' என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. செங்கண்மால் என்பதற்கு இந்திரன் என்றே பழைய உரையாசிரியர் தருமர் பொருள் கூறியுள்ளார்”.
திருக்குறளுக்கும் தருமருரையிருந்திருக்கிறது. ஆனால், அஃது
தற்போது மறைந்துவிட்டது. அந்நூலையறிய என்னுடைய மணக்குடவர் கட்டுரையைப்
பார்க்கவும்.
நாலடி
நானூறு
(நாலடியார்) சமண
நூல்
என்பதை
யாவரும் ஒப்புவர். (அப்பாடா, இதையாவது விட்டுவைத்தார்களே). அஃதாவது, செங்கண்மால் = இந்திரன் = தாமரைக் கண்ணான் என்று
உரை
பரிமேலழகர்
காலத்திற்கு முன்னமே இருந்திருக்கிறது. அவற்றை
மறைத்து பரிமேலழகர் அவ்வாறு சொல்கிறாரா? அல்லது
நாலடியார் உரையை
அவர்
படிக்கவில்லையா? என்பது
தெரியக் கூடவில்லை.
எது
எவ்வாறு அமையினும், செங்கண்மால் என்பதற்கு இந்திரன் என்பது
பொருந்தும் என்பது
ஈண்டு
நமக்கு
தெரியவரும் குறிப்பு.
இதனால், “அஃது உரையன்மையறிக” என்று
பரிமேலழகர் குறித்திருப்பது சற்றும் பொருந்தாது.
தாமரைக் கண்ணான் என்பதற்கு தாமரை போன்ற கண்களை
உடையவன் என்றும், நிறையக் கண்களை
உடையவன் என்றும் பொருள்
கொள்ளலாம். ஆயிரங்கண்ணான் என்பது
இந்திரனுக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று.
பத்மம் என்ற வடசொல்,
தமிழில் தாமரை
என்று
வரும்.
பத்மம்
என்றால் பேரெண்னைக் குறிக்கும். அஃதாவது, பெரிய
எண்
என்ற
முறையில்.
'தாமரை' என்பது பேரெண்ணைக் குறிக்கும் சொல்லாகும். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியல் நூற்பா 97இல் இது மறைமுகமாகச் சுட்டப்படுகிறது. இந்திரன் உடலெங்கும் கண் பெற்றவனாதலால் அவன் தாமரைக் கண்ணான் எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
இவற்றின் அடிப்படையில், தாமரைக் கண்ணான் என்பதற்கு ஆயிரங் கண்ணான் என்றும் பொருள்
கொள்ளலாம்.
இந்திரனுக்கு ஆயிரங்கண் உண்டு
என்பது
சமணர்
கொள்கை.
அருக பகவான் அடைந்த
கேவல
ஞானப்
பேரொளியைக் கண்டு
களிக்க
இந்திரன் விழைந்தான்; அப்பேரொளியைக் காண இருகண்கள் போதாதென எண்ணினான்; ஆயிரங்கண்களால் காண
வேண்டும் என
விழைந்தான்; எண்ணியவாறு எய்தும் தனிக்குரிய வைக்கிரம சரீரத்தின் ஆற்றலால் தன்
உடலெங்கும் கண்களையுண்டாக்கிக் கொண்டான். பகவானைக் கண்டு
போற்றி
மகிழ்ந்தான்; இக்காட்சியைக் கண்ட
பெருமக்கள் இந்திரனை ஆயிரங்கண் உடையான் என்று
வாழ்த்தினர்.
“களியானை
நாற்கோட்டத் தொன்றுடைய செல்வன்
கண்ணோராயிர முடையான் கண்விளங்க
மெய்தும்
ஒளியானை…” – சூளாமணி – 1907
என்றும்,
ஆதிபுராணம் என்னும் நூலில்,
“தவரூபஸ்ய செளந்தர்யம் திருஷ்டியாதிருப்திம்
ஆனாயிவான்
ஹயக்ஷ: சக்ர சஹஸ் ரீக்ஷ: பபூப
பஹுவிஸ்வமய:
என்றும்,
தோத்திரத் திரட்டு என்னும் நூலில்,
”இன்றே அருளென இந்திர ரெண்ணில வாய்க்கண்கொண்டு
நின்றே துதித்துப் பெறலரும் பேற்றினை
நீயுமென்ன..”
என்ற பாடல்களின் வாயிலாக இந்திரனுக்கு
ஆயிரம் கண்கள் உண்டு என்பதும் அது சமணர்களின் கொள்கையென்பதும் பெறப்படும்.
இங்கு இந்திரன் சாபத்தின் மூலம்
ஆயிரம் பெண் குறிகள் தன் உடம்பில் பெற்றவன் என்னும் வைதிக இழிக் கொள்கை நோக்க, ஈங்கு
தாமரைக் கண்ணான் உலகு என்பது சிறப்பு கருதி இந்திரன் உலகு என்றே பொருள் கொள்ள
வேண்டியிருக்கிறது!!
சுபம்! சுபம்!!
வாழிய நல்லறம்!
இரா.பானுகுமார்,
சென்னை
சென்னை
2 comments:
இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் இருந்தமைக்கான பெளராணிக விளக்கம் அறிந்ததே. ஆனால் சமண விளக்கம் (எனக்கு)புதியது. அழகானது. பொருத்தமானது. நன்றி
பானுகுமார் வணக்கம்
தங்கள் கட்டுரைகளையெல்லாம் படித்து வருகின்றேன்.
தாமரை கண்ணான் ஆராய்ச்சி பொருத்தமாக உள்ளது.
ஆனால் "ஆபயன் குன்றும் அறுந்தொழிலர் நூல் மறப்பர்" என்று ஒரு குறள் வருகிறதே? இதையும் விளக்கினால் ஐயம் நீங்கி மகிழ்ச்சி அடைவேன்
நன்றி
சிவா
Post a Comment